டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் ஊதிய உயர்வின்றி தவிப்பு
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் ஊதிய உயர்வின்றி தவிப்பு
ADDED : ஆக 17, 2011 12:42 AM
கடலூர் : மாவட்டம் தோறும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணி புரியும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் ஊதிய உயர்வின்றி தவித்து வருகின்றனர்.
பாஸ்போர்ட் பெற விரும்புவர்கள் அனுப்பும் விண்ணப்ப மனுக்களில் உள்ள தவறுகளைக் குறைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் மாவட்டம் தோறும் பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் இரண்டு வருவாய்த் துறை உதவியாளர்களும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டரும் நியமிக்கப்பட்டனர். அவர்களில் உதவியாளர்களை மாநில அரசில் பணியாற்றுபவர்கள் நியமிப்பது வழக்கம். ஆனால் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் கடந்த 2002ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டிகிரி படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர்.
அலுவலக நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 3,500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை மிகவும் குறைவு என கருதிய அப்போதைய அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2008ம் ஆண்டு 5,000 ரூபாயாக உயர்த்தியது. அதைத்தொடர்ந்து இவர்களுக்கு அரசு எந்த விதமான ஊதிய உயர்வும் வழங்கவில்லை. இதற்கிடையே 6வது ஊதிய கமிஷன் அமல்படுத்தியபோது கூட இவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் இல்லாததால் ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. தற்போது 45 வயதைக் கடைந்த இவர்கள் மனைவி குழந்தைகளோடு குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஸ்போர்ட் வழங்குவதை விரைவு படுத்துவதற்காக 'டாடா கன்சல்டன்சி சர்வீஸ்' என தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரை, கோயமுத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இவ்வலுவலகங்கள் துவங்கப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும் விரைவில் துவங்கப்பட உள்ளன.
அப்படியானால் தற்போது பணியாற்றி வரும் தங்களுக்கு தொடர்ந்து அரசு பணி வழங்குமா? அல்லது வேறு பணிக்கு மாற்றப்படுவார்களா என்ற அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.