டவுட் தனபாலு: போராட்டத்தை காமெடி களமா ஆக்காம இருந்தா பாராட்டலாம்!
டவுட் தனபாலு: போராட்டத்தை காமெடி களமா ஆக்காம இருந்தா பாராட்டலாம்!
ADDED : ஜன 26, 2024 03:42 AM

தமிழக காங். தலைவர் அழகிரி:
'சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி தான் காரணம்' என, காந்தியை சிறுமைப்படுத்தும் வகையில், காழ்ப்புணர்ச்சியோடு கருத்து கூறிய கவர்னர் ரவியை, தேச பக்தர்களின் ஆன்மா மன்னிக்காது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் துவங்கிய போது, சிங்கப்பூர் வானொலியில் நேதாஜி பேசுகையில், 'தேசப் பிதாவே எங்களை வாழ்த்துங்கள். இன்ப துன்பங்களிலும் வெற்றி, தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன்' என்றார்.
டவுட் தனபாலு:
கவர்னரின் கருத்தை கண்டித்து, அவரது மாளிகையை நாளைக்கு முற்றுகையிட போறதா அறிவிச்சிருக்கீங்க... கும்பகோணத்துல நாலு பேரோட ரயிலை மறிச்ச மாதிரி, இந்த போராட்டத்தையும் காமெடி களமா ஆக்காம இருந்தா, 'டவுட்'டே இல்லாம உங்க தலைமையை பாராட்டலாம்!
---
பத்திரிகை செய்தி:
குடியரசு தினமான இன்று, கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
டவுட் தனபாலு:
இவங்க புறக்கணிப்பதால், வானம் ஒன்றும் இடிந்து தரையில் விழுந்து விடாது... கவர்னர் மாளிகைக்கு சில டீ மற்றும் பிஸ்கட்களுக்கான செலவு மிச்சமாகும் என்பது தவிர, வேற எந்த பலனும் இருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
---
அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன்:
தமிழக அரசியலில், நானும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். தமிழக மக்களுக்கு எதிராக செயல் படும் அரசியல் கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது.
டவுட் தனபாலு:
யாருங்க அது... ஓ... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால ஓரங்கட்டப்பட்டவராச்சே இவர்! பன்னீரோட சேர்ந்தா, பலருக்கும் வெளிச்சமா தெரியலாம்ன்னு நினைக்கிறார் போலிருக்கு! ஆனா, அடிக்கிற அரசியல் புயல்ல, இப்போதைக்கு மக்களுக்கு இவர் முகமெல்லாம் தென்படவே படாது என்பதில், 'டவுட்'டே இல்லை.

