டவுட் தனபாலு: பதவி கிடைக்கலைன்னா 'டாட்டா' காட்டிட்டு போயிடுவீங்களோ
டவுட் தனபாலு: பதவி கிடைக்கலைன்னா 'டாட்டா' காட்டிட்டு போயிடுவீங்களோ
ADDED : பிப் 16, 2024 12:23 AM

நடிகை கவுதமி:
நான், 25 ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்துள்ளேன். சமீபத்தில், சில காரணங்களுக்காக அக்கட்சியில் இருந்து விலகி வந்தேன். தற்போது, சரியான நேரத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது; பொறுப்பு அளித்தால், களம் இறங்கி வேலை செய்வேன். ஜெயலலிதா என் மனதில் என்றும் உள்ளார்.
டவுட் தனபாலு:
கடந்த சட்டசபை தேர்தல்ல, ராஜபாளையம் தொகுதியில, 'சீட்' கிடைக்காத விரக்தியில தான், பா.ஜ.,வில் இருந்து வெளியே வந்தீங்க... அ.தி.மு.க,விலும், பதவி, பொறுப்பு கிடைக்கலைன்னா, அங்கயும், 'டாட்டா' காட்டிட்டு போயிடுவீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
---
பத்திரிகை செய்தி:
கூட்டணி குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் மண்டல வாரியாக ஆலோசனை நடத்தினார் நடிகர் கமல். அப்போது, மதுரை மண்டல நிர்வாகிகள், கமல் பிறந்த பரமக்குடி உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என, அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் சிரிப்பை மட்டும் கமல் பதிலாக தந்திருக்கிறார். இதனால், 'சரி என்கிறாரா; பார்க்கலாம் என்கிறாரா' என்ற குழப்பம் கட்சியினருக்கு ஏற்பட்டது.
டவுட் தனபாலு:
அவர் வாய் திறந்து பேசினாலே, எதுவும் புரியாம சிண்டை பிய்ச்சுக்கணும்... இதுல, பேசாம வேற இருந்தா, கேட்கவே வேண்டாம்... தேர்தல் முடியுறதுக்குள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தலையில முடி இருக்குமா என்பது, 'டவுட்'தான்!
---
பா.ம.க., தலைவர் அன்பு மணி:
எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்க்காமல், தன் சொந்த நிதியில் இருந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு உதவ வேண்டும்.
டவுட் தனபாலு: போன வாரம் தான், மழை, வெள்ளத்துக்கு காலநிலை மேல பழியை போட்டாரு... இப்ப, மத்திய அரசுக்கு ஆதரவாக மாத்தி பேசுறாரே... பா.ஜ.,வுடன் கூட்டணி உறுதியாகிடுச்சு என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!