அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி அங்கீகாரம் பெற 31 வரை கெடு
அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி அங்கீகாரம் பெற 31 வரை கெடு
ADDED : ஜன 23, 2025 12:10 AM
சென்னை:'அண்ணா பல்கலை உறுப்புக் கல்லுாரிகள், தங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க, உரிய ஆவணங்களுடன், வரும் 31ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, பல்கலை பதிவாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பிய சுற்றறிக்கை:
பல்கலை உறுப்புக் கல்லுாரிகளில், இளங்கலை, முதுகலை படிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகள், நிபந்தனைகள், ஏற்கனவே, 'https://www.annauniv.edu' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதை பின்பற்றி, வரும் 31ம் தேதிக்குள், உரிய கட்டணத்தை செலுத்தி, அங்கீகாரம் பெற வேண்டும். தாமதமானால், பிப்., 7 வரை, அபராதமாக, 50,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே, கல்லுாரி ஆசிரியர்களின் ஆதார், பான், வங்கி கணக்கு எண், அடையாள எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு உள்ளதுபோல், புதிய ஆசிரியர்களுக்கும் மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களை பதிவேற்றி, ஒருங்கிணைந்த எண் பெற வேண்டும்.
இன்ஜினியரிங், டெக்னாலஜி, கட்டடக்கலை, மேலாண்மை கல்லுாரிகளில், கடந்த நான்கு ஆண்டுகளில் படித்த மாணவர்களின் விபரங்கள், கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு, செலவு கணக்குகளை இணைக்க வேண்டும். ஆவணங்களின் அசல்களை கேட்கும்போது காண்பிக்க வேண்டும்.
கடைசி தேதிக்குள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்காத கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அங்கீகாரம் வழங்கிய பிறகு, ஆவணங்கள் போலியானது என கண்டறியப்பட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.