ADDED : செப் 24, 2024 07:21 AM
சென்னை : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தில், கைதான மூவரது ஜாமின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்ததில், 70 பேர் இறந்தனர். சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து, பலரை கைது செய்தனர்.
இவர்களில் 17 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகியோர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள், நீதிபதி தனபால் முன், விசாரணைக்கு வந்தன.
போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், வேலு மற்றும் கவுதம் ஜெயின் அடைக்கப்பட்டு உள்ளனர்.
''அதனால், அவர்களது ஜாமின் மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. சடையனின் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. கள்ளச்சாராய வழக்கின் விசாரணை முடிந்து, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இதையடுத்து, மூவரது ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.