ADDED : ஆக 23, 2024 05:29 AM

சென்னை : சென்னையை அடுத்த ஆவடி அருந்ததிபுரத்தை சேர்ந்தவர் கோபிநாத், 25. இவர், இம்மாதம் 11ம் தேதி ஜே.பி. எஸ்டேட் சரஸ்வதி நகரில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
தமிழக அரசு சார்பில், அவரது குடும்பத்திற்கு 41 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அவரது மனைவி தீபாவிற்கு அரசு பணியும் தரப்பட்டது.
இந்நிலையில், தேசிய பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் சம்பவ இடத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். பின், தேசிய பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:
கடந்த ஓராண்டில், திருவள்ளூரில் மட்டும் நான்கு துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நாட்டிலேயே விஷ வாயு தாக்கி இறந்தோரின் எண்ணிக்கையில், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 1993 முதல் 2024 வரை, தமிழகத்தில் 258 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில், ஒப்பந்த ஊழியர்களை பணி அமர்த்தும் திட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அப்போது தான் துாய்மை பணியாளர்கள் நல்ல ஊதியம் பெற முடியும்.
கர்நாடகா, ஆந்திராவில், 'டைரக்ட் பேமென்ட் சிஸ்டம்' என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. அங்கு, மாநகராட்சி அல்லது நகராட்சி பணியாளர்களுக்கு, நேரடியாக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், துாய்மை பணியாளர்கள் இடைத்தரகர் இன்றி சரியான ஊதியம் பெறுகின்றனர்.
கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட 11 மாநிலங்களில், துாய்மை பணியாளர் மாநில ஆணையம் உள்ளது. அதேபோல, தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், துாய்மை பணியாளர்கள் பிரச்னை குறித்து முதல்வரிடம் பேச மூன்று முறை முயற்சித்தேன். இதுவரை எனக்கு நேரம் ஒதுக்கவில்லை. இனி வரும் காலங்களில், நகராட்சி, மாநகராட்சிகளில், மனித கழிவுகளை அள்ள, 'ரோபோ' பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

