மின்சாரம் தாக்கி பலி; ரூ.10 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சாரம் தாக்கி பலி; ரூ.10 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 03, 2025 01:47 AM

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயி மின்சாரம் தாக்கி பலியானதற்கு அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
இலுப்பூர் பகுதியை சேர்ந்த சுசி தாக்கல் செய்த மனு: எனது கணவர் வயலுக்குச் சென்ற போது, அறுந்து விழுந்த மின் ஒயரை மிதித்தார். மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்தார். ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இதுபோன்ற விவகாரத்திற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், மின்சார விபத்துகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மின்வாரியம் 2024 ல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மனுதாரர், அவரது மகள், மைனர் மகனுக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், இறந்தவரின் தாயாருக்கு ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு பெற சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தை மனுதாரர் நாடலாம் என உத்தரவிட்டார்.