மலையிட பாதுகாப்பு குழும எல்லையை சர்வே எண் ரீதியாக வரையறுக்க முடிவு
மலையிட பாதுகாப்பு குழும எல்லையை சர்வே எண் ரீதியாக வரையறுக்க முடிவு
ADDED : பிப் 01, 2024 12:30 AM
சென்னை:தமிழகத்தில், மலையிட பாதுகாப்பு குழுமமான, 'ஹாக்கா' எல்லையை, சர்வே எண் அடிப்படையில் வரையறுக்க அரசு முடிவு செய்துள்ளது.
நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில், சமவெளி பகுதிகள் தனியாகவும், மலைப்பகுதிகள் தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சியை முறைப்படுத்த, ஹாக்கா எனப்படும், மலையிட பாதுகாப்பு குழுமம், 1990ல் ஏற்படுத்தப்பட்டது.
புகார்
தமிழகத்தில், 16 மாவட்டங்களில், 43 தாலுகாக்களில் உள்ள, 597 கிராமங்கள் மலையிட பாதுகாப்பு குழும பகுதியாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
அந்தந்த பகுதிகளில் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சியின் அடிப்படையில், மலையிட பாதுகாப்பு குழும எல்லை வரையறுக்கப்படுகிறது. இதில், கிராமங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அதேநேரம், மலையிட பகுதிக்கான தகுதி இல்லாத பகுதிகளும், இதில் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், சமவெளி பகுதிக்கான தன்மையுள்ள பகுதிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது கிராம வாரியாக மலையிட பகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதி வனம் அல்லது மலைப்பகுதியாக இருந்தால், அந்த கிராமம் முழுதும் மலையிட பாதுகாப்பு குழும கட்டுப்பாட்டில் வரும்.
உத்தரவு
இதனால், அதே கிராமத்தில் மலையாக இல்லாத பகுதிகளும் இந்த வரம்புக்குள் வருவதால் நகர்ப்புற வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, கிராமம் முழுதையும் சேர்க்காமல், அதில் எந்தெந்த சர்வே எண்கள் மலைப்பகுதிகளாக உள்ளன என்று பார்த்து, மலையிட பாதுகாப்பு குழுமத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், ஒட்டு மொத்த கிராமத்தையும் சேர்க்கும் நிலை மாறி, குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.