கோவையில் மாணவி கூட்டு பலாத்காரம் அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு
கோவையில் மாணவி கூட்டு பலாத்காரம் அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு
ADDED : நவ 06, 2025 09:51 PM
கோவையில், மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைதான மூவரையும், காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, அடையாளம் காட்டும் வகையில், கோவை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
கொடூர சம்பவம் கோவை பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதியில், நவம்பர், 2ல், ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில், கல்லுாரி மாணவி, தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது, மொபட்டில் வந்த மூவர், ஆண் நண்பரை தாக்கி, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர்.
இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, அவர்களின் உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20, ஆகிய மூன்று பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
நீதிமன்ற காவல் குண்டு காயம்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கோவை ஜே.எம்., 2, மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அவர்களிடம் விசாரித்த பிறகு, வரும், 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரித்து, ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டைன பெற்றுத்தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
குறுகிய நாட்கள் இதன் காரணமாக, போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி, இந்த வழக்கை துரிதமாக விசாரிக்கின்றனர். இதையடுத்து, மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதனால், அரசு தரப்பில், ஜே.எம்., 2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
பி.என்.எஸ்., சட்டத்தின் கீழ், கைதான நாளிலிருந்து 60 நாட்கள் வரை, 'கஸ்டடி' எடுக்க அவகாசம் உள்ளது. இருப்பினும், குறுகிய நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதால், ஒரு சில நாட்களில் போலீசார் கஸ்டடி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை, பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டும் வகையில், கோவை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

