வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு; நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த முடிவு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு; நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த முடிவு
ADDED : டிச 24, 2025 07:30 AM

சென்னை: வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக, நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, நவம்பர் 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. கணக்கெடுப்பு பணிக்கு முன் தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில், 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் இருந்து, 97.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், நீக்கம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனு அளிக்க, 2026 ஜனவரி 18ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
இதற்காக, வரும் 27 மற்றும் 28ம் தேதிகளிலும், ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை, வாக்காளர்கள் வழங்கலாம்.
இந்த அறிவிப்பை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

