ADDED : ஏப் 04, 2025 01:44 AM
சென்னை:ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா, 800 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை மின் வாரியம் அமைக்கிறது. இதன் கட்டுமான பணிகள், 2017ல் துவங்கின; திட்டச் செலவு, 12,776 கோடி ரூபாய்.
பசுமை தீர்ப்பாய உத்தரவால், 2021 மார்ச் முதல் உப்பூர் மின் நிலைய கட்டுமான பணிகள் முடங்கின.
உப்பூர் மின் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியில், துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் விரிவாக்க அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதுவும் கைவிடப்பட்டது.
பின், பொது - தனியார் கூட்டு முயற்சியில் உப்பூர் மின் திட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் பணி துவங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது, உப்பூர் மின் திட்ட பணிகளை மீண்டும் தொடர்வது குறித்து, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில், மின் வாரிய இயக்குநர்கள், எல் அண்டு டி நிறுவனத்தின் புவி அமைப்பு பொறியியல் பிரிவு தலைமை செயல் அதிகாரி பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த திட்டத்தை மின் வாரியமே தொடரலாமா, என்.டி.பி.சி., உடன் இணைந்து அமைக்கலாமா, பொது - தனியார் முறையில் அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக, தலைமை செயலருடன் விரைவில் ஆலோசித்து, 15 தினங்களுக்குள் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

