இந்த 2 கனவுகளுக்காக உழைத்து வருகிறேன்: ஸ்டாலின் பேச்சு
இந்த 2 கனவுகளுக்காக உழைத்து வருகிறேன்: ஸ்டாலின் பேச்சு
ADDED : பிப் 23, 2024 12:05 PM

சென்னை: தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றவது, உலகின் மனிதவள தலைநகராக தமிழகத்தை மாற்றுவது ஆகிய 2 கனவுகள் தனக்கு இருப்பதாகவும், அதற்காக முழு ஈடுபாட்டுடன் தன்னைதானே அர்ப்பணித்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சர்வதேச அளவிலான 'உமேஜின்' என்ற தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று (பிப்.,23) துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர், பழனிவேல் தியாகராஜன். நிதித்துறையை போல தகவல் தொழில்நுட்பத்துறையையும் (ஐ.டி) மேம்படுத்தவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அத்துறைக்கு மாற்றினேன். நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர்.
ஐ.டி., துறையில் மாபெரும் பாய்ச்சல் கருணாநிதியின் ஆட்சியில்தான் துவங்கியது. நாட்டின் முதல் ஐடி பார்க்கை கருணாநிதி அமைத்தார். எனக்கு 2 கனவுகள் இருக்கின்றன. அதில் ஒன்று, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும்; மற்றொன்று, உலகின் மனிதவள தலைநகராக தமிழகத்தை மாற்ற வேண்டும். இதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து வருகிறேன்.
அனைத்து துறைகளும் அதற்கான செயல்திட்டங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. கோவை, மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க் உருவாக்கப்பட இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.