கூட்டு மதிப்பு விடுபட்ட பகுதிகளில் வீடுகளுக்கான பத்திரப்பதிவு நிறுத்தம்
கூட்டு மதிப்பு விடுபட்ட பகுதிகளில் வீடுகளுக்கான பத்திரப்பதிவு நிறுத்தம்
ADDED : மார் 04, 2026 06:13 AM

சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்காமல் விடுபட்ட பகுதிகளில், வீடு விற்பனைக்கான பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நிலங்களுக்கு சர்வே எண் வாரியாக நில வழிகாட்டி மதிப்பை, பதிவுத் துறை நிர்ணயிக்கிறது. இந்த மதிப்பு அடிப்படையிலேயே, நில விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.
ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் நிலத்தின் பங்கு கைமாறுவதற்கு ஒரு பத்திரம், கட்டட மதிப்புக்கு ஒரு பத்திரம் என, இரண்டு வகை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
இதை ஒருங்கிணைக்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை, ஒரே பத்திரம் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், 2023 டிச., 1ல் அமலுக்கு வந்தது. இதற்காக தெரு வாரியாக, அடுக்குமாடி குடியிருப்புகள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கு நிலம், கட்டடம் சேர்த்து கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகம் முழுதும், ஏற்கனவே அடுக்குமாடி வீடுகள் உள்ள பகுதிகளில் தெரு வாரியாக கூட்டு மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிகளில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி வீடு விற்பனையும், இந்த மதிப்பு அடிப்படையில் தான் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
ஆனால், இதில் விடுபட்ட பகுதிகளில், தற்போது தான் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இப்பகுதிகளுக்கு கூட்டு மதிப்பு இல்லாததால், இங்கு கட்டப்படும் வீடுகளை வாங்குவோர் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
தமிழகத்தில் பெரும் பாலான பகுதிகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில் சில பகுதிகள் விடுபட்டுள்ளன. இப்பகுதிகளில், தற்போது தான் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் உரிய அனுமதியுடன் செயல்படுத்தப் படுகின்றன.
கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து, இத்திட்டங்களில் வீடு வாங்க, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்பகுதிகளுக்கு கூட்டு மதிப்பு இல்லாததால், வீடு விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சார் - பதிவாளர்களி டம் கேட்டால், மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என்கின்றனர்.
ஆனால், பதிவுத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தாததால், தமிழகம் முழுதும் வீடு வாங்குவதற்கான பத்திரங்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்..

