ADDED : ஜன 28, 2025 05:56 AM
சென்னை : சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரம்பரிய கட்டடத்தில், பதிவுத்துறை குறித்த அருங்காட்சியகம், 52 லட்சம் ரூபாயில் அமைய உள்ளது.
தமிழகத்தில் சொத்து பரிவர்த்தனை பத்திரங்களை பதிவு செய்வதற்கான அலுவலகம், 1865ல் துவக்கப்பட்டது. பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் மட்டுமே இதற்கான அலுவலகங்கள் துவக்கப்பட்டன.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன், பதிவுத்துறை பணிகள் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடைந்தன. தற்போது, தாலுகாவுக்கு ஒரு பதிவு அலுவலகம் ஏற்படுத்தும் அளவுக்கு, பதிவுத்துறை பணிகள் வளர்ந்துள்ளன.
இந்நிலையில், 1865ல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்ட பாரம்பரிய கட்டடம், சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டடம் சிதிலமடைந்ததால், அங்கு செயல்பட்டு வந்த பதிவு அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
இதையடுத்து, அந்த பாரம்பரிய கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கட்டடத்தை பதிவுத்துறையின் வரலாற்று அடையாளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள பதிவுத்துறையின் பாரம்பரிய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு, 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன கூட்ட அரங்கு அமைக்கப்பட உள்ளது.
பதிவுத்துறையின் தொன்மை மற்றும் சிறப்புகளை மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில், அருங்காட்சியகம், 52 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இத்துறையில் பாதுகாக்கப்பட்டு வரும் பழைய ஆவணங்கள், முத்திரைகள், கைரேகை பெட்டிகள், தட்டச்சு இயந்திரங்கள், கைவிலங்குகள் போன்றவை காட்சிப்படுத்தப்படும். இதற்கான பணிகளை விரைவில் மேற்கொள்ள, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.