ADDED : பிப் 21, 2024 08:59 AM

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரைச் சேர்ந்தவர் விஜில் ஜோன்ஸ், 40, சாப்ட்வேர் இன்ஜினியர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். அங்கு குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், விஜில் ஜோன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, மனோ தங்கராஜ் பற்றி அவதுாறு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, குமரி மாவட்ட தி.மு.க.,வினர் தக்கலை போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூரில் கைது செய்தனர். பெங்களூரில் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த அவரை கைது செய்து, நேற்று தக்கலை அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அஜித் பட நடிகர் மாரடைப்பால் மரணம்
பிரபல ஹிந்தி நடிகர் ரிதுராஜ் சிங், 59, நேற்று மாரடைப்பால் காலமானார். இவர், பத்ரிநாத் கி துல்ஹானியா உள்ளிட்ட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அனுபமா என்ற தொலைக்காட்சி தொடர் வாயிலாக பிரபலமானவர். தமிழில் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்துள்ளார்.
ரிதுராஜ் சிங்குக்கு சில நாட்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மரணம் அடைந்தார்.
லஞ்சம் வாங்கியபோது சிக்கிய பெண் பொறியாளர் கதறல்
தெலுங்கானாவில், மாநில பழங்குடியினர் நல பொறியியல் துறையில், கே.ஜகஜோதி என்பவர் செயல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், துறை ரீதியான கோரிக்கை தொடர்பாக இவரை ஒருவர் அணுகினார். அப்போது, 84,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உதவி செய்வதாக, ஜகஜோதி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு அந்த நபர் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, ஜகஜோதிக்கு அந்த நபர் அளித்தார். அப்போது, அதை மறைந்திருந்து வீடியோ எடுத்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், ஜகஜோதியை கையும் களவுமாக பிடித்தனர்.
தான் மாட்டிக் கொண்டதை அறிந்த அவர், தேம்பித் தேம்பி அழுதார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஜகஜோதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிரித்த முகத்துடன் தோற்றமளிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த இளைஞர் பலி
தெலுங்கானாவில், ஹைதராபாதைச் சேர்ந்த லக் ஷ்மி நாராயண விஞ்சம், 28, என்பவருக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சிரித்த முகத்துடன் தோற்றமளிப்பதற்காக ஹைதராபாதின் ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் உள்ள எப்.எம்.எஸ்., சர்வதேச பல் கிளினிக்குக்கு கடந்த 16ம் தேதி அவர் சென்றார்.
அங்கு அறுவை சிகிச்சை நடந்த போது, லக் ஷ்மி மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதைஅடுத்து, அவரை அழைத்துச் செல்லும்படி, அவரது தந்தை ராமலுவுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. இதன்படி அங்கு வந்த ராமலு, மகனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தந்தை ராமலு கூறியதாவது: என் மகன் அறுவை சிகிச்சை செய்து கொண்டது எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து, எங்களிடம் அவர் தெரிவிக்கவில்லை. அவருக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை; அதிகளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார். ராமலு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாயாரை விமர்சித்தவரை கொலை செய்த சிறுவன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் செல்வம் 33. இவரும் சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் நண்பர்கள். சிவகாமிபுரம் காலனியில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தினர். அப்போது சிறுவன் தனது அலைபேசியில் உள்ள படங்களை செல்வத்திடம் காட்டினார்.
அதில் சிறுவனின் தாயார் படமும் இருந்தது. செல்வம் சிறுவனின் தாயார் குறித்து விமர்சித்துள்ளார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சிறுவனை செல்வம் கத்தியால் குத்த வந்தார். சிறுவன் அந்தக் கத்தியை பிடுங்கி செல்வத்தை குத்தி கொலை செய்தார். கிழக்கு போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
திரிஷா குறித்து பேசியது தவறாக சித்தரிப்பு; மன்னிப்பு கேட்ட மாஜி அ.தி.மு.க., நிர்வாகி
அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தபோது, கூவத்துாரில் சேலம் எம்.எல்.ஏ., உள்பட பலருக்கு, சினிமா நடிகைகள் நெருக்கமாக இருந்ததாக, அ.தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட, சேலம் மேற்கு ஒன்றிய செயலர் ராஜூ பேட்டி அளித்தார். இதற்கு நடிகை திரிஷா, இயக்குனர் சேரன் உள்ளிட்ட சினிமா துறையினர், பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார், 'டிவி'க்கு ராஜூ அளித்த பேட்டி: நடிகை திரிஷா குறித்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதை, நடிகர் சேரன் உள்ளிட்ட திரைத்துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். நான், திரிஷா குறித்து பேச, அவ்வளவு பெரிய ஆள் இல்லை. திரிஷாவை நான் சொல்லவில்லை. திரிஷா உள்ளிட்ட சினிமா துறையினரிடம் மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
'சினேகம்' பவுண்டேஷன் பெயரில் மோசடி: நடிகை ஜெயலட்சுமி கைது
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகன், 44; சினிமா பாடலாசிரியர். இவர், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகரில், மனைவி கன்னிகாவுடன் வசித்து வருகிறார். இவர், 2022 ஆக., 5ல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தான் நடத்தி வரும், 'சினேகம் பவுண்டேசன்' என்ற அறக்கட்டளை பெயரை, பா.ஜ., மாநில மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வருகிறார்' என, கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து, அதே மாதம், 9ம் தேதி நடிகை ஜெயலட்சுமியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சினேகன் தன் மீது பொய் புகார் அளித்துள்ளார்' என்று கூறியிருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, இருதரப்பிலும் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, இருவர் மீதும் சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், சினேகன் முன்ஜாமின் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, திருமங்கலம் போலீசார், நேற்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, சென்னை அண்ணா நகர் மேற்கு மேற்கு பகுதியில் உள்ள, ஜெயலட்மியின் வீட்டில் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, போலீசாரிடம் ஜெயலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சோதனையின் போது, வங்கி கணக்குள் உட்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஜெயலட்சுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் கைது செய்யப்பட்டார்.

