ADDED : பிப் 08, 2024 04:05 AM

சென்னை: கட்டுமான பணி நிறைவு சான்று வழங்கும் போது, அதற்கான பிணையத் தொகையை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என அரசு உத்தரவிட்டும், அதிகாரிகள் தாமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அனுமதியை பெற்றவர்கள், விதிகளுக்கு உட்பட்டு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பணிகள் முடியும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விதிகளுக்கு உட்பட்டுள்ள கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும்போது, 10.7 சதுர அடிக்கு, 200 ரூபாய் வீதம் பிணையத் தொகை வசூலிக்கப்படுகிறது.
கட்டட அனுமதி பெற்றவர் விதிமீறலில் ஈடுபட்டால், இந்த பிணையத் தொகை, அரசின் கணக்கில் சேர்க்கப்படும்.
உரிமையாளர், விதிகளுக்கு உட்பட்டு கட்டடம் கட்டி முடித்தால், பணி நிறைவு சான்று பெற்றவுடன் இத்தொகை திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பெரிய கட்டுமான திட்டங்களுக்கு பணி நிறைவு சான்று பெற்றவர்களுக்கு, பிணையத் தொகை திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:
கட்டட அனுமதி பெற்றவர்கள் விதிகளுக்கு உட்பட்டு முறையாக செயல்பட்டால், அவர்கள் செலுத்திய பிணையத் தொகை திரும்ப கிடைக்கும். முறையாக செயல்பட்டு பணி நிறைவு சான்று பெற்ற பின்னும், பிணையத் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
பணி நிறைவு சான்று வழங்கும் போது பிணையத் தொகை உடனடியாக திருப்பித் தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், அரசின் அறிவிப்பை அமல்படுத்துவதில், கட்டட அனுமதி வழங்கும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் இது போன்ற பிணையத் தொகையை திரும்பப் பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

