மின்சேவை தாமதம்: கேட்காமலே இழப்பீடு வழங்க வாரியத்திற்கு அறிவுறுத்தல்
மின்சேவை தாமதம்: கேட்காமலே இழப்பீடு வழங்க வாரியத்திற்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 22, 2024 01:11 AM
சென்னை:புதிய இணைப்பு உள்ளிட்ட மின்சார சேவைகளை, நிர்ணயிக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் முடிக்கவில்லை எனில், நுகர்வோருக்கு மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும். இதை பாதிக்கப்பட்டவர் கேட்காமல் தாமாகவே வழங்குமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.
விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள், மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். இணைப்பு வழங்க, மின்கம்பம் நிறுவ வேண்டும் எனில், 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் எனில், 90 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
மின்கட்டண விகிதம் மற்றும் குறைபாடு உடைய மீட்டர் மாற்றும் சேவையை, ஏழு நாட்களுக்குள் செய்துதர வேண்டும்.
இதேபோல, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் செய்து தராமல் தாமதம் செய்தால், பாதிக்கப்படும் நபருக்கு இழப்பீட்டை, மின்வாரியம் வழங்க வேண்டும்.
புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மற்றும் கட்டண விகித மாற்றம் போன்ற சேவைகளை தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளைக்கும், 200 ரூபாய்; அதிகபட்சம், 2,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
குறைபாடு மீட்டரை மாற்ற தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளும் 200 ரூபாய், அதிகபட்சம் 2,000 ரூபாய்; மின்னழுத்த பிரச்னையை சரிசெய்ய தாமதம் செய்தால் தினமும், 100 ரூபாயும் அதிகபட்சம், 2,000 ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதேபோல, ஒவ்வொரு சேவைக்கும் தனி இழப்பீடு உள்ளது. தாமத சேவைகளால் பாதிக்கப்படும் நுகர்வோர் புகார் அளித்தும், மின்வாரியம் இழப்பீடு வழங்குவதில்லை என, புகார்கள் எழுகின்றன. அனைத்து மின்சார சேவைகளுக்கும், மின்வாரிய இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கப்படுகின்றன.
அதில், விண்ணப்பிக்கும் தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள் பதிவாகின்றன. எனவே, தாமத சேவைகளால் பாதிக்கப்படும் நுகர்வோர் கேட்காமலேயே, தாமத நாட்களுக்கான இழப்பீட்டை தாமாகவே முன்வந்து வழங்குமாறு, மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.