பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை: ஐகோர்ட் உத்தரவு
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை: ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 24, 2024 10:34 PM

புதுடில்லி: பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு, பாலியல் சீண்டல், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் எம். சிங் மற்றும் அமித்ஷர்மா ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு: மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் இந்த உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும். உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்க வேண்டும்.
முதலுதவி, உள்நோயாளிகளாக சிகிச்சை, தொடர் சிகிச்சை, ஆய்வக சோதனை, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை, உடல் மற்றும் மன ரீதியிலான கவுன்சிலிங் , மன ரீதியிலான ஆதரவு மற்றும் குடும்ப கவுன்சிலிங் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்குகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங் உள்ளிட்டவை தேவையாக உள்ளன. பாலியல் வன்முறை மற்றும் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் பெரிய சவாலை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.