வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது; சென்னையில் டில்லி போலீஸ் அதிரடி
வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது; சென்னையில் டில்லி போலீஸ் அதிரடி
ADDED : ஏப் 29, 2025 07:24 AM

சென்னை: சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக பதுங்கி இருந்த, வங்கதேசத்தை சேர்ந்த, 33 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் டில்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அதே மாநிலத்தை சேர்ந்த சந்த் மியா, 55 என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள், விசா உள்ளிட்ட எந்த வித ஆவணங்களும் இல்லாமல், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று தமிழகம் வந்தனர். சந்த் மியா கூறிய தகவல் அடிப்படையில், சென்னை அருகே மாங்காடு, அம்பாள் நகரில், சாலையோரம் கொட்டகை அமைத்து தங்கி, பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரித்து, காயலான் கடையில் விற்பது போல பதுங்கி இருந்த, ஆண்கள், பெண்கள் என, 27 பேரை கைது செய்தனர். குன்றத்துார் அருணாச்சலேஸ்வரர் நகரில், சாலையோரம் பதுங்கி இருந்த, ஆறு பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களை கொளப்பாக்கம் சமுதாய கூடத்தில் தங்க வைத்து, சந்த் மியாவை உடன் வைத்துக் கொண்டு, போதைப் பொருள் கடத்தல் தொடர்பு குறித்து விசாரித்தனர். அவர்கள் தமிழகம் எப்படி வந்தனர், என்ன செய்கின்றனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில், தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
***