மழை ஓய்ந்ததும் யூரியா தேவை அதிகரிக்கும்; போதுமான அளவு இருப்பு வைக்க உத்தரவு
மழை ஓய்ந்ததும் யூரியா தேவை அதிகரிக்கும்; போதுமான அளவு இருப்பு வைக்க உத்தரவு
ADDED : டிச 03, 2025 06:39 AM

சென்னை: மழை ஓய்ந்ததும், யூரியா தேவை அதிகரிக்கும் என்பதால், அவற்றை போதுமான அளவு இருப்பு வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும், சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது.
இது வரை 30 லட்சம் ஏக்கருக்கு மேல், நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வட கிழக்கு பருவமழையால், பல்வேறு மாவட்டங்களில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வயல்களில் தேங்கியுள்ள நீரை வடிய வைக்கும் முயற்சிகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். நீண்ட நாட்கள் நீரில் மூழ்கிய பயிர்கள், மழை ஓய்ந்ததும் மஞ்சளாக மாற துவங்கும். அதனை தவிர்க்க, விவசாயிகள் அதிக அளவில் யூரியா பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, யூரியாவை போதுமான அளவில் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய, வேளாண்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்திற்கு நவம்பர் மாதம், 1.50 லட்சம் டன் யூரியா; 38,200 டன் டி.ஏ.பி., உரம் ; 45,000 டன் பொட்டாஷ்; 1.16 லட்சம் டன் கூட்டு உரங்களை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில், 1.27 லட்சம் டன் யூரியா; 34,376 டன் டி.ஏ.பி.,; 20,003 டன் பொட்டாஷ்; ஒரு லட்சம் டன் கூட்டு உரங்கள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
தற்போது , கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், 1.21 லட்சம் டன் யூரியா; 52,189 டன் டி.ஏ.பி.,உரம் ; 45,840 டன் பொட்டாஷ்; 1.76 லட்சம் டன் கூட்டு உரங்கள் என, 3.97 லட்சம் டன் உரங்கள் கையிருப்பில் உள்ளன.
எனவே, நடப்பு மாதத்தில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி, உரங்கள் வழங்கப்படும். முறைகேடுகளை தடுக்க, வேளாண்துறை இயக்குநர் வாயிலாக, தினமும் உர இருப்பு மற்றும் வினியோ கம் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

