கூடங்குளம் மின்சாரம் முழுதையும் தமிழகத்துக்கே தர கோரிக்கை
கூடங்குளம் மின்சாரம் முழுதையும் தமிழகத்துக்கே தர கோரிக்கை
ADDED : டிச 06, 2024 12:29 AM

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்படும் கூடங்குளம் மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் யூனிட், 4 - 5 ரூபாய்க்கு வழங்குமாறு, மத்திய மின்துறையிடம், தமிழக மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்துக்கு சொந்தமான, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா, 1,000 மெகாவாட் திறனில், இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி, அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
கூடங்குளம் மின் நிலைய வளாகத்தில், 1,000 மெகா வாட் திறனில் மூன்றாவது அணு உலையும், அதே திறனில் நான்காவது அணு உலையும், ரஷ்யா உதவியுடன் அமைக்கப்படுகின்றன. மூன்றாவது அணு உலையில், 2026 டிசம்பரிலும், நான்காவது அணு உலையில், 2027 ஆகஸ்டிலும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது. இதுவரை எவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்படவில்லை. மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை யூனிட், 8 ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக மின்தேவையை பூர்த்தி செய்ய மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், யூனிட், 4 - 5 ரூபாய்க்கு வழங்குமாறு, மத்திய மின்துறையை, தமிழக மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது. தற்போது, 1 யூனிட் மின்சாரம் சராசரியாக, 3.50 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை வாங்கப்படுகிறது.