சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம்; நாட்டுக்கு பெரிய சவால் என்கிறார் மோடி
சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம்; நாட்டுக்கு பெரிய சவால் என்கிறார் மோடி
ADDED : அக் 01, 2025 07:14 PM

புதுடில்லி: '' வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது,'' என பிரதமர் மோடி பேசினார்.
புதுடில்லியில் நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: சமூக சமத்துவம் என்பது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதில் முன்னுரிமை வழங்குவதை உறுதிபடுத்துவதாகும். அதனுடன் தேசத்தின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும். நமது ஒற்றுமை, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது நேரடி தாக்குதல் நடத்தும் வகையில் பிரச்னைகள் எழுந்துள்ளன. பிரிவினைவாத சிந்தனை, பிராந்தியவாதம், சாதி ரீதியிலான பிரச்னை, மொழி மற்றும் பிரிவினையை, வெளியில் இருக்கும் சக்திகள் தூண்டிவிடுகின்றன. இது போன்ற எண்ணிலடங்கா சவால்கள் நம்முன் இருக்கிறது. இந்தியாவின் ஆன்மா வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ளது. இந்த கொள்கை உடைக்கப்படும் போது, நாட்டின் பலமும் பலவீனம் அடையும்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஊடுருவலை விட இந்த விவகாரம் பிரச்னை உண்டாக்கி உள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்புக்கும், எதிர்கால அமைதிக்கும் தொடர்புடைய பிரச்னை.
இந்த சவாலை அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ள, நாடு துடிப்புடன் இருக்க வேண்டும். நமது ஒற்றுமையை உடைக்கும் மற்றொரு சதியாக, நமது நாட்டை பொருளாதார ரீதியாக மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்த சவால் உடனடியாக சரி செய்யப்பட்டது திருப்தி அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.