60 இடங்களில் 10,000 வீடுகள் இடிப்பு வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல்
60 இடங்களில் 10,000 வீடுகள் இடிப்பு வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல்
ADDED : பிப் 16, 2024 11:53 PM
ஈரோடு:''தமிழகம் முழுவதிலும், 60 இடங்களில் வீட்டு வசதித்துறை மூலம் கட்டப்பட்டு, மோசமாக பழுதடைந்த, 10,000 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் நிருபர்களிடம், வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது பவானிசாகர் அணைக்கு அதிகமாக தண்ணீர் வந்து, உபரி நீர் வெளியேற்றும்போதுதான் செயல்படுத்தப்படும்.
தற்போதைய நிலையில் அத்திட்டத்தில் ஈரோடு உட்பட, 3 மாவட்டங்களில் உள்ள, 1,045 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. உபரி நீர் கிடைக்கும்போது திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
வீட்டு வசதித்துறையில் பயனாளிகளின் குறை, புகார்களை பெற, 16 இடங்களில் புகார் பெட்டி வைத்து, மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது.
தமிழகம் முழுவதிலும், 60 இடங்களில் வீட்டு வசதித்துறை மூலம் கட்டப்பட்டு, மோசமாக பழுதடைந்த, 10,000 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தேவை அடிப்படையில் வீடு, வணிக வளாகம் கட்டப்படும்.
இத்துறையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட, 3,000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. அவற்றை வாடகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உடுமலையில், 110 தனித்தனி வீடுகள் கட்டி, ஒரு வீடு கூட விற்பனையாகவில்லை. அவை அனைத்தும் இடிந்து விட்டன. அவசர கதியில் முறையான திட்டமிடலின்றி கட்டியதால் விற்பனையாகவில்லை என தெரிய வந்தது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.