பிராமணர்களை இழிவாக பேசுபவர்களுக்கு எதிராக சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் வேண்டும்
பிராமணர்களை இழிவாக பேசுபவர்களுக்கு எதிராக சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் வேண்டும்
UPDATED : அக் 07, 2024 10:40 AM
ADDED : அக் 07, 2024 05:42 AM

கோவை : பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது, சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து பிராமணர் சங்க கூட்டமைப்பு சார்பில், கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அனைத்து பிராமணர்கள் சங்க கூட்டமைப்பு மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
தி.க., - த.பெ.தி.க., - கம்யூ.,கட்சிகள் மற்றும் ஈ.வெ.ரா., கொள்கை கொண்ட அமைப்புகள் வன்மத்தோடு பிராமண சமுதாயத்தை, பார்ப்பான், நுாலிபான், கிராஸ்பெல்ட், மடிசார் மாமி, அவாள், இவாள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, பொதுதளங்களிலும், சமூகவலைதளங்களிலும், திரைப்படங்களிலும், அவதுாறு பரப்புகின்றனர்.
பிராமண சமூகத்தினரை இழிவுபடுத்துவதோடு, மத நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். காஞ்சி சங்கரமடத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.
உச்சநீதிமன்றமா, உச்சிகுடுமி மன்றமா என்று நீதித்துறையை விமர்சிப்பதும், கோயில் குருக்கள் மீது வன்மத்தை வீசுவதும், வேதபாடசாலைகள், கோசாலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், பிராமணர்கள் நடத்தும் கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் மீது, அவதுாறு பரப்புவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பிற சமூகத்தை இழிவுபடுத்தி பேசினால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ளது. ஆனால், சிறுபான்மை சமூகமான பிராமணர்களை தொடர்ந்து இழிவு படுத்தி பேசுபவர்களை தண்டிக்க, இதுவரை சட்டமில்லை. பிராமண சமூகத்திற்கு ஆதரவாக, சிறப்பு பி.சி.ஆர்., சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு, பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொடர்ந்து, கோவை கலெக்டரிடம் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளிக்கின்றனர்.