தமிழக நில ஒருங்கிணைப்பு சட்டம் ரத்து செய்ய டில்லியில் ஆர்ப்பாட்டம்
தமிழக நில ஒருங்கிணைப்பு சட்டம் ரத்து செய்ய டில்லியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 18, 2024 02:44 AM
சென்னை:தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரி 13ம் தேதி டில்லியில் போராட்டம் நடக்க உள்ளது.
தமிழக அரசு புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் மட்டுமின்றி நீராதாரங்கள் நீர்வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு விவசாயிகள்மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் விவசாய கடன்கள் தள்ளுபடி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிப். 13ம் தேதி டில்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
இதற்காக தேசிய அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சங்கத்தின் ஆலோசனை கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.
இதில் சங்கத்தின் தமிழக தலைவர் அய்யாகண்ணு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையையும் போராட்டத்தில் முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதை கட்சி சார்ப்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளை ரயில்களில் டில்லிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.