UPDATED : அக் 07, 2026 07:21 PM
ADDED : அக் 07, 2026 07:18 PM
திருப்பூர்: ஊரக உள்ளாட்சிகளில் ஒப்பந்ததாரர்களால் செலுத்தப்பட்ட டெபாசிட் தொகை, ஆறு ஆண்டுகளாக திருப்பி வழங்கப்படாமல் உள்ளதால், அதை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். பணிகளின் மதிப்பீட்டில் ஒரு சதவீத தொகையை டெபாசிட்டாக செலுத்திய பின்னரே டெண்டரில் பங்கேற்க முடியும். பணி கிடைத்த ஒப்பந்ததாரர்கள், மேலும் ஒரு சதவீத தொகையை டெபாசிட்டாக செலுத்தி பணியை தொடங்குகின்றனர்.
டெண்டர் கிடைக்காதவர்களுக்கு டெபாசிட் தொகை உடனடியாகவும், பணியை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி நிறைவடைந்ததும் தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும். ஆனால், பல ஊராட்சி மற்றும் ஒன்றியங்களில் ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக டெபாசிட் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், ‘‘ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக டெபாசிட் தொகையை திருப்பி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தொகை கிடைக்காததால், ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள் எங்களிடம் முறையிட்டு வருகின்றனர். தமிழக அரசு தலையிட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள டெபாசிட் தொகையை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
