''உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி'': சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
''உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி'': சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜன 13, 2024 03:15 PM
ADDED : ஜன 13, 2024 03:08 PM

சென்னை: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தமிழகம் எதிர்கொண்ட மிக்ஜாம் மழை வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது.
கூட்டாட்சி
'எல்லாருக்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய மத்திய அரசு 2024 லோக்சபா தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும்.
பொய்த் தகவல்
ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டில்லி வரை அதிரட்டும். இளைஞரணி மாநாட்டிற்கு இளைஞர்கள் வரத் தயாராகியுள்ள நிலையில் என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.
வதந்தி
உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் துவங்கினர். அதற்கு அமைச்சர் உதயநிதி “எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.