முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு ரூ.82 கோடி ஒதுக்கி முதல் கையெழுத்து துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு ரூ.82 கோடி ஒதுக்கி முதல் கையெழுத்து துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
ADDED : அக் 04, 2024 11:42 PM

சென்னை:சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில், முதல்வர் கோப்பை மாநில போட்டிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட போட்டிகள், கடந்த மாதம் 10ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடந்தன.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு, தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன; 11.56 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில், 33,000 பேர் மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
அவர்களுக்கான போட்டிகள், நேற்று துவங்கின. இம்மாதம் இறுதி வரை நடக்க உள்ளன. துணை முதல்வர் உதயநிதி, நேற்று போட்டிகளை துவக்கி வைத்து, 'முதல்வர் கோப்பையை' அறிமுகம் செய்தார்.
பின், அவர் பேசியதாவது:
நான் துணை முதல்வரானதும், இந்த போட்டிக்கான பரிசுத்தொகை, 37 கோடி ரூபாய் உட்பட, போட்டியை நடத்த, 82 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல் கையெழுத்திட்டேன்.
வீரர், வீராங்கனையரின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு முதல் கைப்பந்து, கேரம், செஸ், வாள் வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை கோ-கோ, டிராக், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நம் மாநிலத்தில் தான், பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன. விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனையருக்கு பல்வேறு திட்டங்களின் வழியே உதவிகள் செய்து வருகிறோம்.
அவற்றை பயன்படுத்தி, நீங்கள் தேசிய, சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று, சாதனைகளையும், பதக்கங்களையும் பெற வேண்டும். அதற்கு, தமிழக அரசு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், செந்தில் பாலாஜி, சுப்பிரமணியன், மூர்த்தி, சேகர்பாபு, கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பங்கேற்றனர்.