ஊதியம் போல உதவித்தொகை தரும் அரசு துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
ஊதியம் போல உதவித்தொகை தரும் அரசு துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
ADDED : அக் 26, 2024 07:02 AM
சென்னை : ''இந்தியாவிலேயே ஊதியம் வழங்குவது போல, உதவித்தொகை அளிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான்,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
முதல்வரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்த 18 மாணவர்களுக்கு, பாரதிதாசன் பல்கலை சார்பில் பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் வழங்கப்பட்டது.
தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தமிழக அரசு, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தை முன்னிறுத்தி செயல்படுகிறது. மக்களுக்கான தேவைகளை அறிந்து, அதற்கான தீர்வுகளை வேகமாக அளிக்க வேண்டும் என்பதற்கான புத்தாய்வு திட்டத்தை, முதல்வர் 2022ல் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் சேர, 24,000 பேர் விண்ணப்பித்தனர். இரண்டு கட்ட தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில், 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி வழியாக, அவர்களுக்கு அரசு துறை செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் 65,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
அவர்களின் மற்ற செலவினங்களுக்காக, மாதம் 10,000 ரூபாய் வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே, ஊதியம்போல உதவித்தொகை அளிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இந்த சிறப்புக்குரிய திட்டத்தில் இணைந்து பணியாற்றும் போதே, சிலருக்கு மத்திய,மாநில அரசு பணி வாய்ப்புகள் கிடைத்தன.
சிலருக்கு, 2 லட்சம்ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்தது.
சிலர் அந்த பணிகளுக்கு சென்றாலும், புத்தாய்வை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுள்ளனர்.
புத்தாய்வு திட்டத்தில்பெற்ற திறமையும் அறிவும், இந்த சமூகத்திற்கு இன்னும் அதிகமாக பயன்பட வேண்டும். அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அடுத்த, 'பேட்ச்' மாணவர்களை விரைவில் தேர்ந்தெடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் தாரேஸ் அகமது, துணை செயலர் பிரதாப் பங்கேற்றனர்.