ADDED : டிச 10, 2024 06:57 AM

சென்னை : ''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், 901 கோடி ரூபாய் செலவில், 1,012 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
சென்னை மாநகராட்சியில் கருணை அடிப்படையில், 106 பேர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் என, 453 பேருக்கு, ரிப்பன் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி, நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அத்துடன், 29.88 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட, நாய்கள் இன கட்டுப்பாட்டு மையம், பள்ளி கட்டடம், புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் என, 17 திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். புதிதாக, 279.50 கோடி ரூபாய் மதிப்பில், 493 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில், அவர் பேசியதாவது:
சென்னையில் இந்த ஆண்டு, இரண்டு முறை அதிக கனமழை பெய்த போதும், மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டது.
சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டவை. சென்னைக்கு செம்மொழி பூங்கா, மெட்ரோ ரயில் திட்டங்களையும் செயல்படுத்தினோம். வடசென்னை மேம்பாட்டு திட்டங்கள், 6,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நடைபாதைகள், விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் 901 கோடி ரூபாய் மதிப்பில், 1,012 திட்டங்கள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
தற்போது, 41 குளங்களை புதிதாக உருவாக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
பத்து ஆரோக்கிய நடைபாதைகள், 7,644 தெருக்களுக்கு புதிய பெயர் பலகைகள், 148 பள்ளிக்கூடங்கள் சீரமைத்தல், 12 கால்நடை கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.
இங்கு, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை அனைவருக்குமானது.
எல்லோரும் இணைந்து, சென்னையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.