UPDATED : செப் 24, 2024 06:25 AM
ADDED : செப் 23, 2024 11:29 PM

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கேட்ட விவகாரத்தால், தி.மு.க.,வுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வலுத்துள்ளது. 'சினிமா நடிகர் உதயநிதி துணை முதல்வராகும் போது, திருமாவளவன் ஆகக்கூடாதா' என கேள்வி எழுப்பிய நிர்வாகியை நீக்க வேண்டும் என, வி.சி.,க்கு தி.மு.க., எச்சரிக்கை விடுத்துள்ளது.
வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'ஆந்திர சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனி பெரும்பான்மை பெற்றது.
'ஆனாலும், கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு, துணை முதல்வர் பதவியை நாயுடு வழங்கினார். அதுதான் அரசியல் முதிர்ச்சி.
'சினிமா நடிகர் உதயநிதி துணை முதல்வராகும் போது, ஒரு கட்சியின் தலைவரான திருமாவளவன் ஏன் ஆகக்கூடாது? திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும் என்பது எங்கள் தொண்டர்களின் விருப்பம்' என்றார்.
அவரது கருத்து, தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா, பலமாக கண்டித்துள்ளார்.
நெருக்கடி
வி.சி., கட்சியில் புதிதாக சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, விபரம் தெரியாமல் பேசியுள்ளார்; இது, கூட்டணிக்கு நல்லதல்ல. ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜா கூறினார்.
கூட்டணி கட்சிகள் என்றாலும், தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்பதற்கு, சமீபத்திய நிகழ்வுகள் ஆதாரம்.
மது ஒழிப்பு மாநாடு, கூட்டணி ஆட்சி என, விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கும் பிரச்னைகள் அரசுக்கு நெருக்கடி தந்ததால், திருமாவை அழைத்து பேசி, தி.மு.க., சமரசம் செய்தது.
கோரிக்கை
இனி பிரச்னை எழாது என, தி.மு.க.,வும், அதன் தலைவர்களும் நம்பியிருந்த நிலையில், கூட்டணி ஆட்சி கோரிக்கைக்கு புது வடிவம் தந்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வராக பதவி உயர்வு அளிப்பது பற்றி, முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுக்காமல் பரிசீலித்து வரும் நிலையில், திருமாவளவன் ஏன் துணை முதல்வர் ஆகக்கூடாது? என, போர்க்கொடி துாக்கிஇருக்கிறார் வி.சி., நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.
இதனால், தி.மு.க.,வுக்கு கோபம் அதிகரித்து, கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடுமோ என வி.சி., நிர்வாகிகள் சிலருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக, வி.சி., பொதுச்செயலர் ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'சனாதனிகளின் அரசியலை வீழ்த்துவது என்ற நம் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. நம் எதிரிகள் தமிழகத்தை குறிவைத்து காய் நகர்த்துகின்றனர். தமக்கு எதிர்ப்பாக உள்ள ஓட்டுகளை சிதறடிப்பது அவர்களின் உத்திகளில் ஒன்று. எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், நாம் விழிப்போடு இருக்க வேண்டும்' என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.
தி.மு.க., கூட்டணி உடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை, அவரது அறிக்கை வலியுறுத்துகிறது.
அயராத உழைப்பு
எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, சிந்தனைச்செல்வன், ஷாநவாஸ் என திருமா கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்களுமே ரவிக்குமார் போன்று தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.
இருப்பினும், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தி.மு.க.,வின் கோரிக்கையை, அவர்கள் ஆதரிக்கவில்லை என்று ஒரு நிர்வாகி கூறினார்.
'நாட்டு நடப்பை அவர் அலசியிருக்கிறார். ஆந்திர அரசியலில் நடந்த சம்பவத்தை ஒரு முன் உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். இதை ஒரு குற்றமாக கருத தேவையில்லை' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களின் அயராத உழைப்பு இல்லாமல், வட மாவட்டங்களில் தி.மு.க., வெற்றி பெற இயலாது என்ற கருத்தும் எதார்த்தமானது தான்; உள்நோக்கம் உடையது அல்ல என அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -