ADDED : பிப் 17, 2024 11:54 PM

''நமக்கு சட்டசபை தேர்தல் தான் முக்கியம்னு சொல்லிட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தான்... 'லோக்சபா தேர்தல்ல தோற்றாலும் பரவாயில்லை... நம்ம ஓட்டு வங்கியை நிரூபிப்போம்... நமக்கு சட்டசபை தேர்தல் தான் முக்கியம்... கூட்டணிக்கு எந்தக் கட்சியும் வரலைன்னாலும், பரவாயில்லை'ன்னு நிர்வாகிகளிடம் சொல்லிட்டாருங்க...
''அதே நேரம், பா.ஜ.,வுல கொங்கு மண்டலம் தவிர, இதர பகுதிகள்ல போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்காம திண்டாடுறாங்க... இதனால, அ.தி.மு.க., கூட்டணியை புதுப்பிக்க, அந்த கட்சியின், 'மணி'யான ரெண்டு, 'மாஜி'க்களிடம், மத்திய அமைச்சர் ஒருத்தர் பேசியிருக்காருங்க...
''அவங்களோ, 'இப்பல்லாம் பழனிசாமி, எங்க பேச்சை கேட்க மாட்டேங்கிறாரு... அவருக்கு புதிய ஆலோசகர்கள் வந்துட்டாங்க... ஒருவேளை, அவரிடம் பிரதமரே பேசினா, மறுபடியும் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கு'ன்னு நழுவிட்டா ங்களாம்...'' என்றார், அந்தோணிசாமி.
''கூகுள் பேயில லஞ்சம் வாங்குதாங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்ட தொழிலாளர் நலத் துறை அலுவலகத்துக்கு, சென்னையில இருந்து, ஒரு மாசத்துக்கு முந்தி தான் பெண் அதிகாரி வந்தாங்க... வந்ததும், வராததுமா வசூல் வேட்டையில இறங்கிட்டாங்கல்லா...
''மாவட்டத்துல இருக்கிற 282 ரேஷன் கடை சேல்ஸ்மேன்களும் மாசம் தலா, 500 ரூபாய் கட்டிங் தந்துடணும்னு கறாரா சொல்லிட்டாங்க... 'இல்லன்னா, ரெய்டு நடத்தி, அபராதம் விதிப்பேன்'னு மிரட்டுதாங்க வே...
''லஞ்ச பணத்தை, அவங்க சொல்ற ஒரு மளிகை கடையில தந்துடணும் அல்லது, 'கூகுள் பே'யில அனுப்பணுமாம்...
''அவங்க கட்டுப்பாட்டுல வர்ற கடைகள், மார்க்கெட்னு பல இடங்கள்லயும் கறாரா வசூல் பண்ணுதாங்க... சில இடங்கள்ல லஞ்சத்தை வசூல் பண்ணி தர, புரோக்கர்களையும் தயார் பண்ணிட்டாங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
டீ கடை ரேடியோவில் ஒலித்த, 'ராணியம்மா ராணி... ராஜ்ஜி யத்தின் ராணி...' என்ற பாடலை ரசித்தபடியே குப்பண்ணா, ''தலா 1 லட்சம் கேக்கறா ஓய்...'' என்றார்.
''யாரு, எதுக்கு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''லோக்சபா தேர்தல் நெருங்கறதால, திருப்பூர் மாவட்டத்தில், 17 துணை தாசில்தார்களை, பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தா... குறிப்பா, ஆபீசுக்கு வந்துட்டு, அவாவா ஆத்துக்கு சீக்கிரமா போற மாதிரி, இடமாறுதல் போட முடிவு பண்ணிணா ஓய்...
''அதனால, எல்லாரும் தலா 1 லட்சம் ரூபாய் தந்துடணும்னு பேரம் பேசினா... ஆனா, யாரும் பணம் தர முன்வராததால, பணியிட மாறுதலை நிறுத்தி வச்சிருக்கா ஓய்...
''இதனால, பயிற்சி முடித்த இருவர், ஒரு பெண் உட்பட மூணு துணை தாசில்தார்கள் மட்டும் இப்போதைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கா... மத்தவா எல்லாம், பழைய இடங்கள்லயே நீடிக்கறா ஓய்...
''உயர் அதிகாரிகள் மட்டத்துலயே, பணம் கொடுத்தா தான் காரியம் நடக்கும்கற அளவுக்கு தான், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இருக்கு... துணை தாசில்தார்கள் பாவம், புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.