ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டம் மக்கள் பங்களிப்புடன் தயாரிப்பு
ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டம் மக்கள் பங்களிப்புடன் தயாரிப்பு
ADDED : அக் 08, 2024 10:31 PM
சென்னை:மத்திய அரசு உத்தரவின்படி, கிராம ஊராட்சிகளில் மக்கள் பங்களிப்புடன், அடுத்த நிதியாண்டிற்கான வளர்ச்சி திட்டங்களை தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 15வது நிதிக்குழு சார்பில், ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த, நிதி வழங்கப்படுகிறது.
இந்நிதியில், தார் சாலைகள், கான்கிரீட் சாலைகள், குடிநீர் தொட்டிகள், குடிநீர் குழாய்கள், கழிப்பறைகள் அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
இதற்கான செயல் திட்டங்கள், இதுவரை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தயார் செய்யப்பட்டன. மக்கள் தேவை அறிந்து பல பணிகள் செயல்படுத்தப்படாததால், அவை மக்களுக்கு பயனின்றி வீணாகின. இதனால், அரசு பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தவிர்க்க, ஒவ்வொரு ஊராட்சியிலும் உடனடி தேவை என்ன என்பதை, மக்களிடமே கேட்டறிந்து, அவர்கள் உதவியுடன் திட்டங்களை தயார் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, அனைத்து ஊராட்சிகளிலும், பொதுமக்கள் பங்களிப்புடன், வரும் 2025 - 26ம் ஆண்டிற்கான வளர்ச்சி திட்டங்களை தயாரிக்க, வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மக்கள் பங்களிப்புடன், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், குடிநீர், வேளாண் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, முழுமையான செயல் திட்டம் தயாரிக்கப்படும்.
கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல், புதிய வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பாக, திட்டங்களை உருவாக்க வேண்டும் என, ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.