சிருங்கேரி இளைய சங்கராச்சாரியாருக்கு காஞ்சியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு
சிருங்கேரி இளைய சங்கராச்சாரியாருக்கு காஞ்சியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு
ADDED : அக் 27, 2024 12:21 AM

காஞ்சிபுரம்:சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள், நேற்றிரவு காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவருக்கு, பக்தர்கள், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய யாத்ரா
கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில், துங்கா நதிக்கரையில், சிருங்கேரி சாரதா பீடம் உள்ளது.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் பங்கேற்கும் விஜய யாத்ரா, சென்னையில் நடக்கிறது.
இதற்காக, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்திற்கு, ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் நேற்று புறப்பட்டார்.
தமிழக எல்லையான ஓசூரை நேற்று மாலை, 5:35 மணிக்கு வந்தடைந்தார்.
அவருக்கு, மூக்கண்டப்பள்ளி லால் பஸ் நிறுத்தம் அருகே, தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓசூர் கிளை, ஓசூர் பக்த ஜன சபா, ஷேத்ரம் சங்கர தபோவனம், ராதாகிருஷ்ண பஜனை மண்டலி மற்றும் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பக்தர்கள் சார்பில், பூரண கும்ப மரியாதையுடன், மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு, நேற்றிரவு 8:05 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு விஜயம் செய்தார். கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் வரவேற்றார்.
காஞ்சி வருகை
அங்கு, அனைத்து சன்னிதிகளிலும் பூஜை செய்த ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பின் அங்கிருந்து, 8:35 மணிக்கு காரில் புறப்பட்ட அவர், நேற்றிரவு காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவருக்கு, பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். காஞ்சிபுரத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை சென்னை வந்தடைகிறார்.
அங்கு, நவ., 13 வரை தங்கியிருந்து, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.