சதுரகிரியில் மருத்துவ மையம் அமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
சதுரகிரியில் மருத்துவ மையம் அமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 15, 2025 05:55 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரியில் பக்தர்கள் தினமும் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையம், விபத்து மீட்பு குழு அமைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது பக்தர்கள் தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளை கடக்க பாலங்கள் அமைக்கவும், செங்குத்து பாதைகளில் கைப்பிடி கம்பிகள் அமைக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டது.
ஆனால் வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது.
மலை ஏறும் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள் இல்லை. நேற்று முன்தினம் தரிசனம் செய்து விட்டு அடிவாரம் திரும்பிய இருவர் தடுமாறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சம்பவ இடத்திலிருந்து அடிவாரம் கொண்டு வருவதில் மிகுந்த சிரமமான நிலை ஏற்பட்டது.
தாணிப்பாறை மலை அடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கவும், அனைத்து நாட்களிலும் விபத்து மீட்பு குழுக்கள் இருப்பதை உறுதி செய்யவும் மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகங்கள், அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.