தமிழக சிறைகளில் தேவையில்லாத ஆவணங்களை அழிக்க டி.ஜி.பி., உத்தரவு: ஊழல்களை மூடி மறைக்க திட்டமா?
தமிழக சிறைகளில் தேவையில்லாத ஆவணங்களை அழிக்க டி.ஜி.பி., உத்தரவு: ஊழல்களை மூடி மறைக்க திட்டமா?
ADDED : ஆக 23, 2025 05:15 AM

மதுரை: தமிழக சிறைகளில் நிர்வாக வசதிக்காக, 'தேவையில்லாத' ஆவணங்களை விதிகளுக்கு உட்பட்டு அழிக்க, டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். பல சிறைகளில் ஊழல் புகார்கள் விசாரணை நடந்து வரும் நிலையில், அதற்கான ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இதன் கண்காணிப்பாளர்களுடன் சமீபத்தில் டி.ஜி.பி., ஆலோசனை கூட்டம் நடத்தியதன் அடிப்படையில், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'சிறை அலுவலகங்களில் ஏராளமான பழைய ஆவணங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எதிர்கால பயன்பாட்டிற்கு தேவை இல்லை என, தெரிகிறது.
அரசின் வழிகாட்டுதல்படி, இது போன்ற காலாவதியான பதிவுகள் இன்னும் அழிக்கப்படவில்லை.
எனவே அந்த ஆவணங்களை இருவாரங்களில் ஆய்வு செய்து, தேவை இல்லாததை அழிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக சில சிறை நிர்வாகங்கள் ஊழல் புகாருக்கு உள்ளாகி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் உள்ளன. சிலர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இச்சூழலில், தேவை இல்லாத ஆவணங்களை அழிக்குமாறு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளதால், அதை காரணமாக வைத்து ஊழல் தொடர்புடைய ஆவணங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர், சிறை காவலர்கள்.
அவர்கள் கூறியதாவது:
சிறைகளில் விலை மதிப்பு பொருட்கள், நிலுவைப்பட்டியல் உட்பட 33 வகையான ஆவணங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே தேவையானது தான்.
இதில், எந்த ஆவணங்களை அழிக்க வேண்டும் என டி.ஜி.பி., குறிப்பிடாததால், அதிகாரிகள் தங்களை காப்பாற்றி கொள்ள முக்கிய ஆவணங்களை, தேவையில்லை என அழிக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக, ஆவணங்களை அழிக்கும் முன், முன்னெச்சரிக்கையாக டிஜிட்டல் ஆவணமாக மாற்றி பாதுகாப்பர்.
ஆனால், சிறையில் அந்த நடைமுறை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. ஊழல்களை மூடி மறைக்கவே டி.ஜி.பி., உத்தரவு பயன்படும் என்று தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.