தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க தினகரன் அழைப்பு
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க தினகரன் அழைப்பு
UPDATED : மார் 16, 2025 02:02 AM
ADDED : மார் 15, 2025 06:35 PM

சென்னை:'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது. அனைவரும் ஒருங்கிணைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை, தமிழகத்தில் அமைத்திடுவோம்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அ.ம.மு.க., 8ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எந்த தீயசக்தியை வீழ்த்த, எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் போராடினரோ, அதே தீயசக்திகளுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு, நம் தலைவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில், இயக்கத்தை பாதை மாற்றி அழைத்து சென்று கொண்டிருக்கும் துரோக கும்பலை, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கி, தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், அவற்றை நிறைவேற்ற மறுக்கிறது. தி.மு.க., மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பை திசை திருப்பும் வகையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு, பின்னர் எதிர்க்கிறது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக, எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில், அதற்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பது என, தி.மு.க., அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்ப, தமிழக மக்கள் தயாராக இல்லை. தி.மு.க., அரசின் அவலங்களை, ஒவ்வொரு வாக்காளரிடமும் முன்நிறுத்தி, மக்களை திரட்டி போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திடுவோம்.
தி.மு.க., அரசை, வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய காலமும், நேரமும் நெருங்கி விட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணியாற்றி, தி.மு.க.,வை வீழ்த்திடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை, தமிழகத்தில் அமைத்திடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.