ADDED : பிப் 13, 2024 07:14 AM
சென்னை : ''தே.மு.தி.க.,வுக்கு 14 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் தான் கூட்டணிஎன்று, நான் சொல்லவில்லை,'' என்கிறார், அக்கட்சி பொதுச்செயலர்பிரேமலதா.
அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், 14 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' தரும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று நான் கூறவில்லை. மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தெரிவித்த கருத்தை தான் சொன்னேன்.
பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் தனித்து போட்டியிட வேண்டும் என்றனர். சிலர் மட்டும், '2014 தேர்தலில் கொடுத்தது போன்று, 14 தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்றனர்; அதை தான் நான் கூறினேன்.
அடுத்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுத்து, தே.மு.தி.க., தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் தான் எங்களுடன் பேச்சை துவங்க வேண்டும். இதற்காக, தே.மு.தி.க., குழு ஓரிரு நாட்களில்அறிவிக்கப்படும்.
அனைத்து கட்சிகளிலும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' கேட்பதில், எந்த தவறும் இல்லை. இவ்வாறு பிரேமலதா கூறினார்.