மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; டி.ஐ.ஜி., பாதுகாவலருக்கு தொடர்பு
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; டி.ஐ.ஜி., பாதுகாவலருக்கு தொடர்பு
ADDED : டிச 17, 2024 05:52 AM

சென்னை : போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, நான்கு போலீசார் கைதாகி உள்ள நிலையில், இக்குற்றத்தில், டி.ஐ.ஜி., ஒருவரிடம் பாதுகாவலராக இருக்கும் போலீஸ்காரருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
செயலி வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்ற, சென்னை அசோக் நகர் குற்றப்பிரிவு போலீஸ்காரர் ஜேம்ஸ், 35, அயனாவரம் போலீஸ்காரர் பரணி, 32, மற்றும் என்.சி.பி., எனும் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர்கள் ஆனந்த், 35, சபீர், 34, ஆகியோர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் ஜேம்சை, வடபழனி காவல் நிலைய போலீசார் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரித்து உள்ளனர். தற்போது, ஆனந்த்தை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது, ஜேம்ஸ் மற்றும் ஆனந்த் உள்ளிட்ட போலீசார், மெத் ஆம்பெட்டமைன் விற்றதுடன், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த அசோக்குமார், 39, கே.கே.நகரில் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் டாக்டர் கார்த்திக், 28, ஆகியோரிடம் பணம், நகை பறித்து, அடித்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது.
மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்களுக்கு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.
இந்நிலையில், தங்கள் கூட்டணியில், சென்னையில், போலீஸ் டி.ஐ.ஜி., ஒருவரிடம் பாதுகாவலராக இருக்கும் போலீஸ்காரருக்கும் தொடர்பு இருப்பதாக, காவல் விசாரணையில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், டி.ஐ.ஜி.,யின் பாதுகாவலர் குறித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார், ஆனந்த், ஜேம்ஸ், பரணி, சபீர் ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் வாயிலாக, போதை பொருள் கடத்தலில் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.