டிஜிட்டல் பயிர் சர்வே திட்டப் பணி சொதப்பல்! இறுதி கட்டத்தில் மாணவர்களிடம் திணிப்பு
டிஜிட்டல் பயிர் சர்வே திட்டப் பணி சொதப்பல்! இறுதி கட்டத்தில் மாணவர்களிடம் திணிப்பு
ADDED : நவ 07, 2024 04:23 AM

கோவை: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் வகையிலும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், தேசிய அளவில் வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், 2023 ஆக., மாதம், டிஜிட்டல் பயிர் சர்வே துவக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில், 2023 செப்., மாதம் வருவாய் துறையின் கீழ், வி.ஏ.ஓ.,க்களுக்கு., வேளாண் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனால், இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வி.ஏ.ஓ., கூட்டமைப்பு சார்பில், இப்பணி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த, 2023 செப்., மாதம் துவக்கப்படவேண்டிய சர்வே, தமிழகத்தில் மேற்கொள்ளப்படாமல் முடங்கியது. 2025 மார்ச் மாதம் இத்தகவல்கள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், இறுதி கட்டத்தில் வேறு வழியின்றி தற்போது, வேளாண் பல்கலை மாணவர்களை பயன்படுத்தி சர்வே பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
வேளாண் பல்கலையின் கீழ், தனியார் உட்பட அனைத்து கல்லுாரிகளில் படிக்கும் 20,000 மாணவர்கள், ஆசிரியர்கள் இதில் கட்டாயம் பங்கேற்க பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நடைபெறவிருந்த தேர்வுகள், கல்விச் சுற்றுலா அனைத்தும் தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுதும் கிராமங்கள் வாரியாக சர்வே பணிகளை மாணவர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வேளாண் பல்கலை ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் ரவீந்தரனிடம் கேட்டபோது, ''இது ஒரு சின்ன பயிற்சி மட்டுமே. இதன், முன்கூட்டி அனுபவமாக, பாடங்களுடன் இணைந்து தான் சர்வே பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, விவசாயிகளின் வாழ்கை முறையை அறிந்து கொள்ள முடியும்.
''மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசின், 3 டிஜிட்டல் வேளாண் திட்டத்தில் சர்வே நடக்கிறது.
''அனைத்து மாநிலங்களிலும் இப்பணிகள் நடக்கின்றன. பிற மாநிலங்களில் கொஞ்சம் முன்பு பணிகளை துவக்கி முடித்து விட்டனர்; நாம் தற்போது துவக்கியுள்ளோம். மாநில அரசுடன் இணைந்து தான் இதை மேற்கொள்கிறோம்,'' என்றார்.