11,372 நீர்நிலைகளின் டிஜிட்டல் வரைபடங்கள் தயார்: நில அளவை துறை நடவடிக்கை
11,372 நீர்நிலைகளின் டிஜிட்டல் வரைபடங்கள் தயார்: நில அளவை துறை நடவடிக்கை
UPDATED : ஜூலை 07, 2025 01:27 PM
ADDED : ஜூலை 07, 2025 12:41 AM

சென்னை: தமிழகத்தில், 11,372 நீர்நிலைகள், டிஜிட்டல் முறையில் துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு, அதன் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில், 41,948 ஏரிகள் உள்ளன. ஆனால், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால், ஏரிகள் இருந்த அடையாளங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'மாவட்டம், தாலுகா வாரியாக, ஏரிகள் குறித்த செயற்கைக்கோள் வரைபட விபரங்களை வெளியிட வேண்டும்' என, சில ஆண்டுகளுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடவடிக்கை
அதன்படி, ஏரிகள் குறித்த செயற்கைக்கோள் வரைபட விபரங்களை, வருவாய் துறை வெளியிட்டது. ஆனாலும், பெரும்பாலான மக்களால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுதும் நில அளவை பணிகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நீர்நிலைகளின் டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நில அளவை துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நீர்நிலைகளை, டிஜிட்டல் முறையில் நில அளவை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 2021 மே மாதம் துவங்கிய இப்பணியில், 14,116 ஏரிகள் தொடர்பான நில அளவை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதில், 11,372 நீர்நிலைகளின், டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த விபரங்கள், https://tngis.tn.gov.in/waterbodies/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், மாவட்டம், தாலுகா, கிராமம் பெயரை தேர்வு செய்து, அங்குள்ள நீர்நிலைகளின் வரைபடங்களை பார்க்கலாம்.
செயற்கைக்கோள்
சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் அமைவிடத்தை, துல்லியமாக காட்டும் செயற்கைக்கோள் வரைபடம், அதன் சர்வே எண், எல்லைகள் குறித்த விபரங்களை, பொதுமக்களும், பல்வேறு துறையினரும் எளிதாக அறியலாம்.
குறிப்பாக, ஒவ்வொரு நீர்நிலையின் சர்வே எண் அடிப்படையில், அசல் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால், ஆக்கிரமிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.