பழனிசாமி துரோகத்திற்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பர் சொல்கிறார் தினகரன்
பழனிசாமி துரோகத்திற்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பர் சொல்கிறார் தினகரன்
ADDED : ஜன 30, 2024 01:00 AM
காரைக்குடி: ''முன்னாள் முதல்வர் பழனிசாமி துரோகத்திற்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பர். லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.ம.மு.க., பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தினகரன் பின் கூறியதாவது: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க., இடம்பெறும்.
நடிகர் விஜய் கட்சி துவங்கிய பிறகு அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கையில் தான் உள்ளது. அது குறித்து ஒரு கட்சித் தலைவராக நான் கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதில் கருத்து வேறுபாடு கிடையாது. தமிழகத்திற்கு நிறைய முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
வரும் லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க பிரசாரத்திற்கு செல்ல இருப்பதால் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின் முடிவு செய்யப்படும்.
ஸ்டாலின் பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றினார். அமைச்சர் உதயநிதி நீட் தேர்வை நீக்கி விடுவோம் என்று தந்தையை விட அதிக பொய் சொல்கிறார் என்றார்.