தினமலர் செய்தி எதிரொலி: மாணவர்களை பாராட்ட நேரில் வந்தார் 'ராக்கெட்' விஞ்ஞானி!
தினமலர் செய்தி எதிரொலி: மாணவர்களை பாராட்ட நேரில் வந்தார் 'ராக்கெட்' விஞ்ஞானி!
ADDED : ஜூலை 17, 2025 07:25 AM

கோவை; தினமலர் நாளிதழில் ஜூலை 13ம் தேதி, 'பசுமை ரோபோ முதல் பாதுகாப்பு கருவி வரை' என்ற தலைப்பில், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ரோபோட்டிக்ஸ் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து, விரிவாக செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்க வந்த 'இஸ்ரோ' முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அந்த பள்ளிக்கு நேரில் சென்று, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து பாராட்டினார்.
பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தையும் பார்வையிட்டு, மாணவர்களுடன் அறிவியல் தொடர்பாக கலந்துரையாடினார்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், “அறிவியல் ஆர்வத்திற்கு விதைப்பும் ஊக்கமும் பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும். அரசு மற்றும் தன்னார்வலர்களின் இணைப்பில் அரசு பள்ளிகளில், 'ஸ்டெம் லேப்' அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இத்தகைய மாணவர் கண்டுபிடிப்புகள் வெளிவரும் போது, அது மற்ற பள்ளிகளுக்கும் ஊக்கமளிக்கும்,” என்றார்.