விரும்பும் சரக்கு கிடைக்காமல் "குடி'மகன்கள் தவிப்பு
விரும்பும் சரக்கு கிடைக்காமல் "குடி'மகன்கள் தவிப்பு
UPDATED : செப் 01, 2011 02:47 AM
ADDED : செப் 01, 2011 02:06 AM

விழுப்புரம் : டாஸ்மாக் கடைகளில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதாலும், 'குடிமகன்'கள் விரும்பும் சரக்குகள் கிடைக்காததாலும், குடிமகன்கள் விருப்பப்படி போதையேற்ற முடியாமல், திண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில், மாவட்டங்கள் தோறும் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன. அரசிற்கு வருவாய் அள்ளித்தரும் டாஸ்மாக்கில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதால், 'குடிமகன்'கள் விரும்பும் சரக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற, 'ஹாட் டிரிங்க்ஸ்' வகைகளில் எம்.சி., ஓல்டு மங்க், மானிட்டர், ஜானிக்ஷா, கார்டினல், எம்.எச்., போன்ற சரக்குகள், குடிப்பிரியர்களிடையே அதிகளவில் விற்பனையாகி வந்தது. இவை, குவாட்டர் 65 முதல் 75 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தற்போது குடிப்பிரியர்கள் விரும்பிய சரக்குகள் வரத்து குறைக்கப்பட்டு, உயர் ரக சரக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஈவ்னிங் வாக்கர், ஆபிசர் சாய்ஸ், டே நைட், எஸ்.என்.ஜெ., நம்பர் ஒன், எம்.ஜி.எம் நம்பர் ஒன் போன்றவையும், போல்ஸ், பிரிட்டிஷ் எம்.சி.ஆர்., மார்பியஸ், ஓட்கா வகை பிராண்டுகளும் அதிகளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இவை, குவாட்டர் 140 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விலை அதிகம் உள்ள உயர் ரக சரக்குகள், டாஸ்மாக் கடைகளுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. குடிமகன்கள் விரும்பிக் கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்துவிட்டன. விலை அதிகரிப்பும், பாப்புலர் பிராண்டு தட்டுப்பாடும் குடிமகன்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. இதனால், குடிமகன்கள் விரும்பும் சரக்குகள் கிடைப்பதில்லை. பீர் வகைகளில் கிங்பிஷர், பிளாக்நைட், ராயல் சேலஞ்ஜர் போன்றவை, குறைந்தளவே கிடைக்கின்றன. மாற்றாக, மார்கோபோலோ, ஹைஓல்டேஜ், 5001, 10001, புல்லட், சேன்ட் பைப்பர் உள்ளிட்ட விலை உயர்ந்த பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சரக்கு தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும் விற்பனையாளர்கள் சிலர், டூப்ளிகேட் சரக்குகளை விற்று பணம் பார்க்கின்றனர். விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து சரக்குகளை வரவழைத்து, அவற்றை முறைகேடாக விற்கின்றனர். இது போன்ற நிலை தொடர்வதால் குடிப்பிரியர்கள், கூடுதல் பணத்தைச் செலவு செய்து, விருப்பமில்லாத சரக்குகளை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலர், மலிவு விலையில் என்ன கிடைக்கிறதோ, அவ்வகை சரக்குகளை தேடுகின்றனர். தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்பதே, குடிமகன்களின் எதிர்பார்ப்பு. டாஸ்மாக் அதிகாரிகள் சொல்வது என்ன? சரக்கு தட்டுப்பாடு குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் மது விற்பனையில், மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் 42.94 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் மது வகைகள் அனுப்பப்படுகின்றன. இவை உடனுக்குடன் விற்றுவிடுவதால், சில இடங்களில் கிடைக்காமல் போயிருக்கலாம். உதாரணமாக எம்.சி., பிராண்டு மட்டும், 1,600 பெட்டிகள் வந்து, உடனே விற்றுள்ளது. கார்டினல், கிங் பிஷர் வழக்கம் போல் வருகிறது. ஜானிக்ஷா, கோல்கொண்டா போன்ற ஒரு சில பிராண்டுகள், நிறுவனத்திலிருந்தே வருவதில்லை. பதிலாக, எம்.ஜி.எம்., வி.எஸ்.ஓ.பி.,போன்ற பிராண்டுகள் வருகின்றன. வழக்கம் போல் எம்.சி., எம்.எச்., - எஸ்.என்.ஜெ., போன்றவை, சம அளவில் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. சென்னையிலிருந்து ஸ்டாக் வந்ததும், அனைத்து பிராண்டுகளும், தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படுகின்றன. விற்பனை வேகமாக நடப்பதால், தட்டுப்பாடு போன்ற நிலை உள்ளது. மாநிலம் முழுவதும் இதே நிலை தான் பின்பற்றப்படுகிறது. சரக்குகள் தட்டுப்பாடு, விற்பனைக் குறைவு என்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அதிகாரி கூறினார்.