ADDED : செப் 01, 2011 02:07 AM

திருச்சி : முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் நேருவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கேர் இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வகையில், கல்லூரி நிர்வாகத்தால் தனியாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த சாலை அமைக்கும் பணிக்காக, அப்பகுதி விவசாய குளத்து மண்ணை பயன்படுத்துவதாக, தாயனூர், மணிகண்டம் பகுதியை சேர்ந்த விவசாய அமைப்புகள் சின்னதுரை தலைமையில், சோமரசம்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர்.அதே போல், சின்னதுரை உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மீது, பணி செய்ய விடாமல் தடுப்பதாக கேர் இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார்களை, டி.எஸ்.பி., அழகேசன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல், சாலைஅமைத்ததும், அதற்கு விவசாயத்துக்கு பயன்படும் பொதுக்குளத்தில் இருந்து மண் எடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், இவரது மனைவி லதா, சகோதரர் மணிவண்ணன் உள்ளிட்டோர் மீது, பிரிவு 145ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் மீதான விசாரணையை, ஆர்.டி.ஓ., சங்கீதா நேற்று துவங்கினார்.