PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். என்ற ரீதியில் செய்திகள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கதை சொல்லும் பாணியில் செய்திகளை சுவாரசியமாக சொல்லி, வாசகர்களை வளைத்து போட்டது தினமலர். எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.
இது ஒரு செய்தியா என்று ஏனைய பத்திரிகைகளால், குறிப்பாக மலையாள பத்திரிகைகளால் உதாசீனம் செய்யப்பட்ட ஒரு நிகழ்வை, மிகுந்த ரசனையுடன் தினமலர் விருந்தாக்கியதை வாசகர்கள் ரொம்பவே ருசித்து மகிழ்ந்து சிலாகித்தார்கள். அது இது:
கேரளாவின் பிரபலமான ஒரு தலைவரை கைது செய்ய அன்றைய சர்க்கார் உத்தரவு பிறப்பித்தது. இதை மோப்பம் பிடித்து விட்ட அந்த தலைவர், மின்னல் வேகத்தில் தலைமறைவாகி விட்டார். அவரது போட்டோவை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, இரவு பகலாக போலீசார் தேடிக் கொண்டிருந்தார்கள்.
அது ஒரு பவுர்ணமி ராத்திரி. நிலவு வெளிச்சத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்து போய் கொண்டிருந்தார்கள். எதிரில் ஒரு உருவம் தலையில் முக்காடு போட்டு கொண்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. லத்தியை தரையில் தட்டி போலீஸ்காரர்கள் அந்த உருவத்தை நிற்க சொன்னார்கள். அதை தொடர்ந்து நடந்த சம்பாஷனை:
யாருடே நீ? உன் பெயர் என்ன? அர்த்த ராத்திரியில் எங்கே போகிறாய்?
என் பெயர் சங்கரன். பக்கத்து ஊருக்கு போய் விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கிறேன்.
வீடு எங்கே இருக்கிறது?
அதோ தெரிகிறதே, அதுதான் என் சொந்த ஊர்.
சரி, தீப்பெட்டி வைத்திருக்கிறாயா? பீடி பற்ற வைக்க தேவைப்படுகிறது.
நான் நம்பூதிரி குடும்பமாக்கும். பீடி சிகரட் பழக்கம் எல்லாம் கிடையாது. அதனால் தீப்பெட்டி இல்லை.
ஓ, பெரிய குடும்பம்.. போடா போ.
இப்படி சொல்லிவிட்டு போலீஸ்காரர்கள் தொடர்ந்து நடக்கிறார்கள். சிறிது தூரம் சென்றதும் ஒரு போலீஸ்காரர் சட்டென நிற்கிறார்.சட்டை பையில் வைத்திருந்த போட்டோவை எடுத்து, நிலவு வெளிச்சத்தில் உற்று பார்க்கிறார். விறைப்பாகி தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டு கேட்கிறார்:
நாம் இப்போது பார்த்தவன் சங்கரன் என்று பெயர் சொன்னான் தானே? நம்பூதிரி என்றும் சொன்னான். சங்கரன் நம்பூதிரி. ஆ.. அவன் தான் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். ஐயோ, வசமாக வந்து சிக்கியவனை பிடிக்காமல் விட்டு விட்டோமே..
இப்படி அவர் சொன்னதும் இன்னொரு போலீஸ்காரரும் திடுக்கிடுகிறார். இருவரும் வந்த வழியில் திரும்பி பூட்ஸ் கால் தடதடக்க வேகமாக ஓடுகிறார்கள்.
என்ன பிரயோஜனம்? ஈ.எம்.எஸ்.தான் போயே போய் விட்டாரே, காட்டுக்குள்.
இப்படி வெளியானது செய்தி. வீடு கடை எல்லா பக்கமும் இந்த செய்தியை பரபரப்பாக விவாதித்தார்கள். ராமசுப்பையரிடம் ஊழியர்கள் சொன்னார்கள். அவர் சொன்னது இது:
போலீஸ்காரர்களுக்கு ஈ.எம்.எஸ்.சை தெரியாதே தவிர, அவருக்கு நன்றாக தெரியும், இவர்கள் நம்மைதான் தேடி கொண்டிருக்கிறார்கள் என்று. அந்த சூழலிலும் கொஞ்சம்கூட தயங்காமல் தன்னுடைய பெயர், கிராமம், புகை பிடிக்காதவன் என்று சகல விவரங்களையும் தைரியமாக அவர்களிடம் சொல்லியிருக்கிறார். அந்த நேர்மை எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் செய்தியாக்க சொன்னேன்.
இது எப்டி இருக்கு?