வெளிமாநில பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க 24 மணி நேர சோதனை சாவடி அமைப்பு திண்டுக்கல் கலெக்டர் தகவல்
வெளிமாநில பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க 24 மணி நேர சோதனை சாவடி அமைப்பு திண்டுக்கல் கலெக்டர் தகவல்
ADDED : நவ 04, 2025 10:24 PM
சென்னை: 'வெளிமாநில பிளாஸ்டிக் கழிவுகள், கொடைக்கானலில் கொட்டப்படுவதை தடுக்க, 24 மணி நேர சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இயற்கை எழில் நிறைந்த கொடைக்கானலில், காட் சாலை உள்ளிட்ட சாலையோரங்களில், உணவு கழிவுகள், உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை குவிந்து கிடக்கின்றன.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள குப்பை, மலைச்சரிவுகளில் உருண்டு செல்வதால், மலைப்பகுதியிலும் குப்பை குவிகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. இது குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி, திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தாக்கல் செய்த அறிக்கை:
மாவட்ட ஊரக மேம்பாட்டு நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகள், உணவு பாதுகாப்பு, வனம், காவல்துறை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு துறைகளின் வாயிலாக, கொடைக்கானல் மலைப்பகுதி முழுதும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாதம் ஒரு முறை கடைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கொடைக்கானலுக்குள் நுழைவதையும், வெளி மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதையும் தடுக்க, 24 மணி நேரமும் இயங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இந்த பணிகளில், 64 பேர் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் 15 கிராமங்களில், பசுமை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மாதத்தில் மட்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தியவர்களுக்கு, 65,340 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைக்கானலுக்குள் ஐந்து லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள் அனுமதிக்கப் படுவதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

