தொடர் மழை!: திண்டுக்கல் மாவட்டத்தில் 39.2 செ.மீ மழை பதிவு
தொடர் மழை!: திண்டுக்கல் மாவட்டத்தில் 39.2 செ.மீ மழை பதிவு
ADDED : ஜன 09, 2024 05:14 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(ஜன.,09) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று அதிகாலை 4 மணிக்கு பெய்யத் துவங்கிய மழை விடாமல் காலை 7 மணி வரை பெய்தது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் நனைந்து கொண்டே மாணவர்கள் சென்றனர். தனியார் பள்ளிகளும் பள்ளி வேன்களை வழக்கம் போல் அனுப்பி வைத்தனர். அப்படி சென்ற ஒரு பள்ளி வேன் ஒத்த கண் பாலத்தில் நிரம்பியிருந்த தண்ணீரில் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் திருச்சி ரோடு, சந்தைரோடு, சாலை ரோடு, பழநி பைபாஸ், கடைவீதி, ஆர்.எம்.காலணி, நாகல்நகர் நத்தம் ரோடு என பல்வேறு இடங்களிலும் ரோடுகளில் மழைநீர் ஆறுபோல் ஓடின.
மதுரை ரோடு நகர் பகுதிகளில் முட்டியளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சென்றன. குறிப்பாக ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை இடைவிடாமல் கொட்டியது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 4 மணிநேரத்தில் மொத்தம் 39.2 செமீ மழைபதிவாகியுள்ளது.