முதல்வர், நீதிபதி குறித்து அவதுாறு; திண்டுக்கல் த.வெ.க., நிர்வாகி கைது
முதல்வர், நீதிபதி குறித்து அவதுாறு; திண்டுக்கல் த.வெ.க., நிர்வாகி கைது
ADDED : அக் 12, 2025 11:22 PM

சாணார்பட்டி; கரூர் நெரிசல் பலி தொடர்பாக முதல்வர், நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் படத்துடன் அவதுாறு பரப்பியதாக திண்டுக்கல் த.வெ.க., நிர்வாகி நிர்மல் குமாரை , சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.
சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் 35.இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
இவர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவ பலி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து சமூக வலைதளங்களில் படத்துடன் அவதுாறு கருத்துகளை பதிவிட்டார்.
இதுகுறித்து செந்துறையைச் சேர்ந்த தி.மு.க., ஐ.டி.,விங் நிர்வாகி செல்வகுமார் சாணார்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று நிர்மல் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணை என்ற பெயரில் நான்கு மணி நேரமாக வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷன் முன் அக்கட்சி தொண்டர்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டு, மறியல் செய்ய முயற்சித்தனர்.
அவர்களில் 13 பேரை கைது செய்த போலீசார் மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர்.
நிர்மல் குமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.