ADDED : ஜன 07, 2025 07:46 PM

சென்னை:'நேரடி நெல் கொள்முதல் பணியை, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திடம் வழங்காமல், தமிழக நுகர்பொருள் வாணிப கழகமே மேற்கொள்ள வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற் சங்கத்தினர், சென்னை கோயம்பேடு, தமிழக நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் அருகில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலக்கண்ணன் கூறியதாவது:
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் நுகர்பொருள் வாணிப கழக இடத்தில், அ.தி.மு.க., ஆட்சியில், 4 கோடி ரூபாய் செலவில், மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டது. பழைய கட்டடத்தில் இயங்கி வந்த, ஒரு பகுதி அலுவலகம், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய அலுவலக கட்டடத்தில், மாதம் 33 லட்சம் ரூபாய் வாடகைக்கு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும், 3.40 கோடி ரூபாய் வாடகை வழங்கப்பட்டு உள்ளது. அந்த பணத்தில், கீழ்ப்பாக்கத்தில் பழைய கட்டடத்தை இடித்து, புது கட்டடம் கட்டியிருக்கலாம். விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக நெல் கொள்முதல் பணியை, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திடம் வழங்காமல், தமிழக நுகர்பொருள் வாணிப கழகமே மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.